க்ருஷ்ணர் க்ருதி
ராகம் : கமாஸ் தாளம் : ஆதி
இயற்றியவர் : கானசரஸ்வதி
பல்லவி
ஆராதனை குறையுண்டோ சொல்லப்பா க்ருஷ்ணா
இராப்பகல் துதிபாடி சரண்என்ற பேதை-என் ||
அனுபல்லவி
அரும்பெரும் அடியார்கள் ஹரிநாமம் ஜெபிக்கக்கண்டு
குருஎன்று இல்லாமல் திருநாமம் செப்பினேன்-என் ||
சரணம் 1
கோபிகைக் கூட்டமது எனைக்காண வில்லையா
கோலாகலமாய் நீஎன்னோடு ஆட வில்லையா
ஆயர்குல மக்கள் அடைக்கலச் செல்வமே
மாயபிறவி தந்துஎனை உழலச் செய்தாய்-என் ||
சரணம் 2
கண்ணயர்ந்தால் கண்முன்னே காட்சிநீ தருகின்றாய்
பண்ணிசைத்தால் என்முன்னே களிநடம் ஆடுகின்றாய்
கொண்டல்மணி வண்ணா பாண்டு ரங்கா
தண்டனிட்டேன் கிண்கிணிபதம் ராதே கானப்ரியா ||